குற்றம்

ஆந்திரா டூ மதுரை: சொகுசுப் பேருந்தில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆந்திரா டூ மதுரை: சொகுசுப் பேருந்தில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

webteam

சொகுசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 423 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி திண்டுக்கல் வழியாக திருமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வால்வோ பேருந்தை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை 7 அட்டை பெட்டிகளில் பெங்களுரில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்து கார்களில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதையும் காவல் துறையினர் கண்டறிந்தனர்

இதைத் தொடர்ந்து சொகுசுப் பேருந்து, 2 கார் மற்றும் அதில் இருந்த 423 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் டோட்டா பாண்டி, நடத்துநர் வெங்டராமி ரெட்டி, பேருந்து உரிமையாளர் சுனில் முத்தையா ரெட்டி, மதுரையைச் சேர்ந்த அருண்குமார், டேவிட் தினகரன், இராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடத்தலில் தொடர்புடைய சந்துரு, சிவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவல் துறையினருக்கு மதுரை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டு தெரிவித்தார்.