Accused pt desk
குற்றம்

சென்னை: நிற்பதுபோல் நடித்து பறந்து சென்ற கார்! சினிமாவை மிஞ்சிய சேஸ் - சிக்கிய 200 கிலோ கஞ்சா!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நேற்றிரவு சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இரண்டு கார்களை சோதனைக்காக நிறுத்த முயன்றனர். அப்போது சாலையோரம் காரை நிறுத்துவது போல் நடித்து காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

Ganja seized

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வெள்ளசேரி அணுகு சாலையில் கார் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது அதில், 200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அதை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ் (32). தன்ராஜ் (28). நூனி (25) ஆகியோரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட முதல் தர கஞ்சாவை சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழக்கத்தில் விடுவதற்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

Luxury car

இந்நிலையில், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.