அமெரிக்காவில் இறந்த மாணவர் PT
குற்றம்

அமெரிக்காவில் தொடரும் சோகம்; ஆந்திர மாணவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் சடலமாக மீட்பு!

சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன் மீண்டும் ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

அமெரிக்காவில் 20 வயது ஆந்திர மாநில மாணவர் கொல்லப்பட்டு காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் இருதினங்களுக்கு முன் மீண்டும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திரபிரதேசம், விஜயவாடா குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பருச்சூரி சக்ரதர். இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி; இந்த தம்பதியரின் மகன் அபிஜித். சிறுவயது முதல் அபிஜித் நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அபிஜித் தனது மேற்படிப்பிடிப்பை அமெரிக்காவில் உள்ள பாஸ்டம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விருப்பப்பட்டுள்ளார். முதலில் மறுத்த பெற்றோர், பின் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மகனின் விருப்பத்திற்கு சம்மதித்துள்ளனர்.

இதனால், அபிஜித் அமெரிக்காவில் பாஸ்டம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இஞினியரிங் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மர்மநபர்களால் கொலைசெய்யப்பட்ட அபிஜித்தின் உடல் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலை சம்பவம், அமெரிக்க போலிசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணம் மற்றும் மடிக்கணினிக்காக அபிஜித்தை கொலை செய்திருக்கலாம் எனவும், பல்கலைக்கழகத்தில் உள்ள ஏனைய மாணவர்களுடன் அவருக்கு ஏதாவது தகராறு ஏற்பட்டு அதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மாணவரது உடல், அமெரிக்காவின் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துக்கொண்டு குண்டூர் மாவட்டத்தில் உள்ள புரிபாலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று தகவல் வெளிவந்துள்ளது.