குற்றம்

ஆந்திரா: செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 கூலித் தொழிலாளர்கள் கைது

ஆந்திரா: செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 கூலித் தொழிலாளர்கள் கைது

Veeramani

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வீரபல்லி மண்டலம் கட்டிகோட்டா என்ற இடத்தில் மாவட்ட வன அதிகாரி ரவீந்திரா, ராயசோட்டி வனச்சரகர் முரளி கிருஷ்ணா தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயன்றவர்களை வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். வனத்துறை அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் செம்மரங்களை ஆங்காங்கே வீசி விட்டு தப்பியோடினர். இதில் 8 பேர் தப்பியோடிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கூலி தொழிலாளர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு லாரி மற்றும் 10 லட்சம் மதிப்புள்ள 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட வன அதிகாரி ரவீந்திரா தெரிவித்தார். தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.