நகைகடையில் திருடியவர் புதிய தலைமுறை
குற்றம்

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்.. ஆனாலும் காதலிக்கு செலவு செய்ய நகைக்கடையில் திருடி வசமாக சிக்கிய இளைஞர்!

PT WEB

தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை திருடிய இளைஞர்... மீண்டும் அதே கடைக்கு அடுத்த நாள் திருட வந்த போது சிக்கிய சம்பவம்.

பட்டப்படிப்பு முடித்து தனியார் வங்கியில் பணிபுரியும் இளைஞர் காதலிக்கு செலவு செய்ய திருடியது விசாரணையில் அம்பலம்.

சென்னை தியாகராய நகர் துரைசாமி சாலையில் உள்ள தனியார் நகைக் கடைக்கு நேற்று முன்தினம் நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர் இரண்டு சவரன் மதிப்புள்ள மோதிரத்தை திருடிச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகள் பார்த்து மாம்பலம் காவல் நிலையத்தில் நகைக்கடை மேலாளர் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று உஸ்மான் சாலையில் உள்ள அந்த தனியார் தங்கை நகை கடைக்கு மீண்டும் அதே இளைஞர் வந்தபோது சிசிடிவி காட்சிகள் ஒப்பீடு செய்து கடை ஊழியர்கள் பிடித்து அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாம்பலம் போலீசார் நடத்திய விசாரணையில், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பி.சி.ஏ பட்டதாரி சதீஷ்குமார் என்பதும்(26), தனியார் வங்கியில் மெடிக்கல் பில்லிங் பிரிவில் பணியாற்றுவதும் தெரியவந்தது.

நகை கடையில் திருடிய இரண்டு சவரன் மோதிரத்தை பல்லாவரத்தில் ஒரு அடகு கடையில் வைத்து பணம் வாங்கி செலவு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மாதம் 30,000 சம்பளம் வாங்கும் சதீஷ் தான் காதலிக்கும் பெண்ணுடன் ஊர் சுற்றுவதற்காகவும் அவருக்கு விலை உயர்ந்த ஆடைகள் பரிசு பொருட்கள் வாங்கி தருவதற்காகவும் திருட்டு வேலையில் இறங்கியதாக தெரிவித்துள்ளார். இதுவரை நான்கு நகைக்கடைகளில் திருடியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை 4 கடைகளில் மட்டுமே நகைகள் திருடியுள்ளாரா? அல்லது பல கடைகளில் திருடியுள்ளாரா என்பது குறித்து மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.