தீயணைப்பு வீரர் தீபாவளி பண்டிகைக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோவால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஒவ்வொரு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம். இந்நிலையில் நாமக்கல் தீயணைப்புப் நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் திருமுருகன் என்பவர் ராசிபுரத்தில் உள்ள சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கு நிறுவனத்தின் உரிமையாளர் நல்வினை செல்வம் இல்லாததால், அவருக்கு போன் செய்துள்ளார் தீயணைப்பு வீரர் திருமுருகன்.
அப்போது தங்களது அலுவலகத்திற்கு வந்தபோது தாங்கள் இல்லை என்றும், அதனால் தீபாவளி போனஸ் வேண்டும் எனவும் தீயணைப்பு வீரர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த நல்வினை செல்வன், ‘அரசாங்கம் சம்பளம் சரியாக தருகிறதல்லவா? ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்?’ என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த தீயணைப்பு வீரர்அ செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்திவரும் நிலையில் தீயணைப்புதுறை வீரர் ஒருவர் லஞ்சம் கேட்கும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு தீபாவளியின் போது ராசிபுரம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை செய்து பணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.