குற்றம்

அம்பத்தூர்: மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆசிரியை போக்சோவில் கைது

அம்பத்தூர்: மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆசிரியை போக்சோவில் கைது

webteam

அம்பத்தூரில் மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்பத்தூரில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர் கல்லூரியில் சேர காத்திருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாணவன் தனது நண்பர்களுடன் சென்னை, மாநில கல்லூரிக்கு கலந்தாய்வுக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இதன் பிறகு இவர் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்பத்தூர் போலீஸார் சந்தேக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியயை நடத்தி வந்த ட்யூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

அப்போது மாணவன் கிரிஷ்ண குமாருக்கும் ஆசிரியயை சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர் மாணவனுடனான நட்பை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயம் நடைபெற்றுவிட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார். இதனால் மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவை பேச வற்புறுத்தி வந்துள்ளார்,

இதை தொடர்ந்து ஆசிரியை காதலை தொடர மறுத்ததால் மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் பின்னர் அவனது மொபைல் போனை ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியயை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.