குற்றம்

”எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை” - சூரி புகாரில் விஷ்ணு விஷாலின் தந்தை நேரில் விளக்கம்

”எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை” - சூரி புகாரில் விஷ்ணு விஷாலின் தந்தை நேரில் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என நடிகர் சூரி அளித்த மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.

இந்த விசாரணையை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்காக பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ரமேஷ் குடவாலா மற்றும் அவரது மகன் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகினர். இவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளனர். இதில் தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என இருவரும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.