தன் பதவியை பயன்படுத்தி வருமானத்தை விட 101 சதவீதம் கூடுதலாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆர்.எஸ்.ராஜன். இவரது வீடு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விற்பனை பத்திரம், குத்தகை பத்திரம், இன்சூரன்ஸ் பத்திரங்கள், 2 கார்கள் மற்றும் 2 பைக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
இந்த சோதனையையொட்டி லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதில் ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் ராஜன் மற்றும் இவரது மனைவி கோமதி ஆகியோர் மீது ‘பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக’ 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1995ம் ஆண்டு சப் ரிஜிஸ்ட்டராக பதவியில் சேர்ந்தார். இதன்பின்னர் கடந்த 2010ம் ஆண்டு மாவட்ட பதிவாளராக பதவி உயர்வுபெற்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பதவி வகித்தார். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மாவட்ட பதிவாளராக மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இவருக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் இந்த நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு ராஜன் மற்றும் இவரது மனைவி கோமதியின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சத்து 89 ஆயிரமாக இருந்தது. ஆனால் கடந்த 2012ம் ஆண்டு இவர்களது சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 82 லட்சமாக உயர்ந்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுக்குள் இவரது வருமானம் ரூ.3 கோடியே 14 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்களது செலவு ரூ.60 லட்சத்து 96 ஆயிரமாக இருந்தது. இவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 கோடியே 53 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. இதன்மூலம் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுக்குள் இவர்களது வருமானம் 101 சதவீதமாக உயர்ந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு ஊழியரான ராஜன் தனது பதவியைப் பயன்படுத்தி சொத்துக்களை குவித்தது உறுதியானது. மேலும் ராஜனின் மனைவி, கணவனின் வருமானம் மூலம் சொத்துக்களை வாங்கிக்குவித்து ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்து ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் ராஜன் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பது இந்த ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செய்தியாளர்: சுப்பிரமணியன்