தன் தாயை தரக்குறைவாக பேசியதால் கட்டடத் தொழிலாளியை கொலை செய்தேன் என கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு கன்னிக்கோவில் குளத்தில், கடந்த 16-ஆம் தேதி, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் விரைந்து சென்று குளத்தில் மிதந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தலையில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் குளத்தில் இறந்து மிதந்தவர் திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(30) என்பதும் கொத்தனார் வேலை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சந்கேத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன்(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கஜேந்திரன் போலீசாரிடம் “சில நாட்களுக்கு முன் வெங்கடேசன் எங்கள் வீட்டின் பக்கத்தில் செங்கற்கள் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது தூசி பறந்ததால், எனது தாய் கன்னியம்மாள் அதுகுறித்து கேட்டதற்கு தரக்குறைவாக பேசி தகராறு செய்தார்.
இந்நிலையில், கடந்த, 14 ம் தேதி இரவு, திருவாலங்காட்டில் வெங்கடேசன் தனியாக நடந்து வந்தார். அப்போது நானும், எனது நண்பன் ஜானகிராமன்(25) ஆகிய இருவரும் மது குடித்துவிட்டு போதையில் இருந்ததால், வெங்கடேசனிடம் தட்டிக்கேட்டேன். அதற்கு வெங்கடேசன், ஜானகிராமனை தாக்கினான். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் தலையில் இரு முறை வெட்டினேன். இதில் மயங்கி விழுந்த வெங்கடேசனை கன்னிக்கோவில் குளத்தில் துாக்கி வீசிவிட்டு சென்றோம்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து திருவாலங்காடு போலீசார் கஜேந்திரன், ஜானகிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.