குற்றம்

`பஸ்ல போக சோர்வா இருந்துச்சு, அதான் பைக் திருடினேன்’-ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் கைது

`பஸ்ல போக சோர்வா இருந்துச்சு, அதான் பைக் திருடினேன்’-ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் கைது

webteam

பேருந்தில் பயணம் செய்து காவல்நிலையத்திற்கு கையெழுத்திட செல்வது சோர்வை ஏற்படுத்தியதால், இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(40). இவர் ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் இரவு வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் காணாமல் போன தனது இருசக்கர வாகனத்தின் புகைப்படம் மற்றும் சிசிடிவியில் பதிவான குற்றவாளியின் புகைப்படம் ஆகியவற்றை தினேஷ் தங்களது வியாபார ரீதியிலான வாட்சப் குழுவில் பதிவிட்டு, தனது இருசக்கர வாகனம் திருடு போய் விட்டதாகவும் அது பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை கண்ட சிலர் அவரது வாகனம் நெற்குன்றம் அண்ணாநகர் பகுதிகளில் சுற்றுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு 11 மணியளவில் அண்ணாநகர் டவர் பார்க் அருகே அவரது இருசக்கர வாகனம் இருப்பதை தெரிந்து கொண்ட இருசக்கர வாகன உரிமையாளர் தனது நண்பர்களோடு சென்று கையும் களவுமாக அந்த நபரை பிடித்து கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாநகர் போலீசார் குற்றவாளியை பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 23) என்பது தெரியவந்தது. பி.காம் பட்டதாரியான இவர் அண்ணாசாலை பகுதியில் தாஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று விட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததாகவும், தினமும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் வந்து கையெழுத்திட்டு செல்லவேண்டும் என நீதிபதி உத்தரவின் பேரில் தினமும் கையெழுத்திட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தினமும் பேருந்தில் பயணம் செய்வதால் சோர்வடைந்து விடுவதாகவும், தினமும் வந்து செல்ல பேருந்து பயணத்தில் மட்டுமே மூன்று மணி நேரம் செலவிட வேண்டியுள்ளதால் அண்ணாசாலை காவல்நிலையத்தில் எதிரே இருந்த ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் திருடிய வாகனத்தை அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் சிக்கி கொள்வேன் என்பதை அறிந்து தெருவில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்துக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதால் அங்கு பார்த்தசாரதியை ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.