நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வளம்பகுடி அருகே வேனில் இருந்து கைதி, கை விலங்குடன் தப்பியோடினார்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர்மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதவிர நாகை காவல் நிலையத்தில் ஏற்கெனவே தனசேகரன் மீது வழக்கு உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தனசேகரனை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோபிசெட்டிபாளையததில் இருந்து வேளாங்கண்ணி காவல்துறையினர் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர். தஞ்சையை அடுத்த வளம்பகுடியில் அருகே காவலர்கள் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு காவலர்கள் சென்றபோது, காவல் வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட கைதி தனசேகரன், கைவிலங்குடன் தப்பி ஓடினார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் விரட்டி சென்று பார்த்தும் பிடிக்க முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் ஊர்மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். தற்போது பல்வேறு இடங்களில் தனசேகரனை தேடி வருகின்றனர். கைவிலங்குடன் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.