அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைவரான சுப்பையா சண்முகம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கொடுத்த புகாரை, புகார் கொடுத்த பெண்மணி வாபஸ் பெற்றுள்ளார்.
பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அவரது காரை, அருகில் கணவரை இழந்த 52 வயது பெண்மணியின் இடத்தில் நிறுத்திக்கொள்ள கேட்டதாகத் தெரிகிறது. இதற்கு அனுமதி அளித்த அந்தப் பெண்மணி, அதற்கான தொகையை மாதத் தவணை முறையில் செலுத்தி விடவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், சுப்பையா சண்முகம் அப்பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தது மட்டுமன்றி, அவர் பயன்படுத்திய முகக் கவசங்கள் மற்றும் குப்பைகளை அங்கு போட்டு விட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் ஒன்றை அளித்தார்.
ஆனால் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட காவலர்கள் நேற்று இரவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சுப்பையா மீது காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை அப்பெண்மணி வாபஸ் பெற்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் வழக்கை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரிலும், சுப்பையா பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் மன்னிப்புக் கேட்டதன் அடிப்படையிலும் புகாரானது திரும்ப பெறப்பட்டுள்ளது என பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.