குற்றம்

ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்- மோசடி செய்து ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர்!

ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்- மோசடி செய்து ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர்!

webteam

சென்னையில் ஒ.எல்.எக்ஸ் செயலியில் பகுதி நேர வேலை தேடிய பெண்ணை நூதன முறையில் மோசடி செய்து ஆறு லட்சம் ரூபாய் ஏமாற்றிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி கோயில் பதாகை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான சந்தியா. கடந்த மே மாதம் வீட்டில் இருந்தபடி பணியாற்ற ஆன்லைனில் வேலை தேடி உள்ளார் சந்தியா. அப்போது ஒ.எல்.எக்ஸ் எனும் தனியார் வர்த்தக செயலின் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தியாவுக்கு அறிமுகமாகியுள்ளார். வீட்டில் இருந்தபடி பேக்கிங் செய்யும் நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 5000 முதல் ரூபாய் 8000 வரை வாரத்திற்கு சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேலும் ரூபாய் 5000 முன்பணம் செலுத்தினால் வேலை உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்ததையடுத்து சந்தியா அந்த பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார். பின்னர் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் சந்தியாவுக்கு ரூபாய் 60 லட்சம் லாட்டரி அடித்ததாக தெரிவித்து அந்த பணத்தை பெற முன் பணமாக ரூ.7.5 லட்சம் வரை வரியாக செலுத்துமாறு கூறியுள்ளார். இதையும் நம்பிய சந்தியா நகையை அடமானம் வைத்து ரூபாய் 6 லட்சம் வரை அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு தவணை முறையில் பணத்தை செலுத்தி விட்டு தனக்கு குலுக்கலில் விழுந்த பரிசுத்தொகையை கேட்டுள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் அந்த நிறுவனம் லாட்டரி முறையை ரத்து செய்து விட்டதாக தெரிவித்து செலுத்திய பணத்தை விடுவிக்க ரூபாய் 5000 செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். காவல் ஆய்வாளர் தரனிபாய் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சென்னை தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த மதன்குமார் என்ற 32 வயதான தனியார் நிறுவன ஊழியர் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.