குற்றம்

இளம் பெண்ணை காரில் கடந்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

இளம் பெண்ணை காரில் கடந்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

webteam

மணப்பாறை அருகே மூளை வளர்ச்சிக் குன்றிய இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற மர்ம நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கணேசன்-சின்னமணி தம்பதியினர். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் தமிழ்ச்செல்வி பிறந்தது முதல் மூளை வளர்ச்சிக் குன்றிய நிலையில் உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் நின்றுகொண்டிருந்த தமிழ்ச்செல்வியை, காரில் வந்த மர்ம நபர் சாக்லெட் கொடுப்பதுபோல் கொடுத்து காரின் உள்ளே தமிழ்ச்செல்வியை இழுத்து போட்டுகொண்டு அங்கிருந்து வேக வேகமாக காரை ஓட்டியுள்ளார். 

இதைக்கண்டு அருகிலிருந்த பள்ளி மாணவர்கள் தகவல் அளித்துள்ளனர். உடனே திரண்ட ஊர் பொதுமக்கள் இருச்சக்கர வாகனங்களில் அந்த காரை துரத்திச் சென்றனர். சுமார் 7 கி.மீ தூரம் காரை துரத்திச் சென்ற பொதுமக்கள் பொன்னம்பட்டி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலையில் சாலை போக்குவரத்து முடங்கியது. பின் தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வையம்பட்டி காவல்துறையினர், பொதுமக்களை சமரசம் செய்து, பெண்ணின் தாய் சின்னமணி அளித்த புகாரின்பேரில் மர்ம நபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.