குற்றம்

ராஜஸ்தான்: 20 லட்ச ரூபாய் கரன்சியை கேஸ் அடுப்பில் எரித்த தாசில்தார் : காரணம் என்ன?

ராஜஸ்தான்: 20 லட்ச ரூபாய் கரன்சியை கேஸ் அடுப்பில் எரித்த தாசில்தார் : காரணம் என்ன?

EllusamyKarthik

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த தாசில்தாரான கல்பேஷ் குமார் ஜெயின் நள்ளிரவில் தனது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த கரன்சி ரூபாய் பண்டல்களை கேஸ் அடுப்பில் எரித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 முதல் 20 லட்ச ரூபாயை அவர் தீயில் போட்டு எரித்து உள்ளதாக தெரிகிறது. 

புதன்கிழமை அன்று இரவு அவரது வீட்டு கதவை லஞ்ச ஒழிப்பு இலாக்காவை சேர்ந்த அதிகாரிகள் தட்டியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தனது வீட்டை சோதனையிட்டால் கையும் களவுமாக மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய அவர் வீட்டை பூட்டிக் கொண்டு இதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

முன்னதாக அந்த மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் ஒருவர் மூலமாக ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கியுள்ளார். அதனை தாசிலதாரிடம் ஒப்படைக்கவே தான் பெற்றதாக அந்த வருவாய் ஆய்வாளர் வாக்குமூலம் கொடுக்க சம்மந்தப்பட்ட தாசிலதாரின் வீட்டை சோதனையிட அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.