குற்றம்

“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்

“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்

webteam

பணத்திற்காகவும், நகைக்காகவும் என் மகளை கொலை செய்துள்ளனர் என்று சினிமா துணை நடிகை யாசிகாவின் தாய் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா மரியா ராணி என்ற யாசிகா. 21 வயதாகும் இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் ‘மன்னர் வகையறா’ படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். யாசிகா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து வேலை பார்த்து போது செல்போன் கடையில் வேலை செய்து வந்த அரவிந்த் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரவிந்த் தன்னுடைய தந்தை மற்றும் அண்ணன் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து யாசிகாவுடன் வசித்து வந்துள்ளார். 

இந்தச் சூழலில் கடந்த 13 ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியவாறு யாசிகாவின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யாசிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று நாட்களுக்கு முன் அரவிந்த் யாசிகாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டது தெரியவந்தது. 

மேலும் தமது தற்கொலைக்கு அரவிந்த் தான் காரணம் எனவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னை கொடுமை படுத்திய அரவிந்த்துக்கு தக்க தண்டனை பெற்றுத்தரவேண்டும் எனக் கூறி தமது தாயின் செல்போன் எண்ணுக்கு யாசிகா குறுஞ்செய்தி அனுப்பியதும்  தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து யாசிகாவின் தற்கொலைக்கு காரணமான அரவிந்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் யாசிகாவின் தாய் எஸ்தர் ப்யூலா ராணி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் “என் மகளை வீட்டில் நான் போய் பார்த்தபோது அங்கே அனைத்து பொருளும் உடைந்திருந்தன. என் மகள் வைத்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவை எதுவும் வீட்டில் இல்லாமல் இருந்தது. 

மேலும் என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனை அவள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் கலைத்துள்ளார். அதற்கான ஆதாரம் வீட்டிலிருந்தது. அப்போதுதான் இவர்கள் திட்டமிட்டு என் மகளை கொலை செய்துள்ளனர் என்ற சந்தேகம் ஊர்ஜிதமாகியது. அதனை கொண்டு நான் காவல் ஆய்வாளரிடம் அரவிந்த் மற்றும் அவரது குடும்பதினர் மீதும் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் தற்கொலை வழக்காக பதிவு செய்து என்னை மிரட்டி கையெப்பபம் வாங்கினர். 

மேலும் என்னை சொந்த ஊருக்கு செல்ல விடாமல் சம்பவம் நடந்த வீட்டிலே கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். இங்கு என் பிள்ளைகளுடன் சாப்பிட வழியில்லாமல் தவித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் என் மகளை கொலை செய்த அரவிந்த் மற்றும் அவனது கூட்டாளியான அஜித் ஆகியோர் மீதும், அவர்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் புகாரில் கூறியுள்ளார்.