குற்றம்

செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் மாணவி தற்கொலை

செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் மாணவி தற்கொலை

webteam

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் நாகலாபுரம் வன்னிகுளம் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஆனந்தி அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு தெரியாமல் செல்போன் வைத்திருந்தாக தெரிகிறது. இந்தச் சூழலில் ஆனந்தி நேற்று வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை பார்த்த ஆசிரியர்கள் ஆனந்தியை கண்டித்துள்ளனர். மேலும் ஆனந்தி செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அவரது பொற்றோர்களிடம் போன் செய்து புகார் கூறியுள்ளனர். 

இந்நிலையில் ஆனந்தி தான் செல்போன் பயன்படுத்துவது வீட்டுக்கு தெரிந்து விட்ட காரணத்தினால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வந்த தந்தை முருகேசன், தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்கு ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.