குற்றம்

கொள்ளையடித்து முதலாளி ஆனது எப்படி ! கள்ளத் துப்பாக்கி தலைவன் கைது

கொள்ளையடித்து முதலாளி ஆனது எப்படி ! கள்ளத் துப்பாக்கி தலைவன் கைது

webteam

சென்னையில் கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். 

சென்னை பாரிமுனை முத்துசாமி சாலையில் உள்ள செவிலியர் குடியிருப்பு அருகில் உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை மடக்கி விசாரித்தபோது திடீரென தப்பி ஓடினார் அவரை தனிப்படை போலீசார் துரத்தி மடக்கி பிடித்தனர். பின் சோதனை செய்ததில் அவரிடம் துப்பாக்கி இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நரேந்திர சிங் என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை வந்ததும் தெரிய வந்தது. 

சவுகார்பேட்டையில் பை விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு தன்னுடைய சொந்த ஊர் நண்பர்களை வேலைக்கு சேர்த்து அதே பகுதிகளில் பூட்டிய வீடுகளை கண்டறிந்து நண்பர்களை வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி சம்பாதித்தது விசாரணையில் தெரிய வந்தது. பின் சொந்தமாக பை விற்பனை செய்யும் கடை ஒன்றை ஆரம்பித்து முதலாளி ஆனார். பிறகு தன்னுடைய நண்பர்களை வைத்தே கொள்ளையடித்து வசதியாக வாழ்ந்து வந்தார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைதானால் நரேந்திர சிங் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் சவுகார்பேட்டையில் ராஜேஷ் என்பவரது வீட்டில் 50 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, யானை கவுனியில் ஜெயந்தி என்பவரது வீட்டில் ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நகை பட்டறையில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் தற்போது கைதான நரேந்திர சிங்கிற்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து தான் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை வாங்கியதாக கைதான நரேந்திரசிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இந்த துப்பாக்கியை வைத்து மிரட்டுவதற்காக வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளனர். இந்த கை துப்பாக்கியை கைதான நரேந்திர சிங்கிற்கு யார் கொடுத்தது? இவரது கூட்டாளிகள் யார்? யார்? தலைமறைவாக உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.