நாமக்கல்லில் நடுரோட்டில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சி அருகே கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் குப்புசாமி (50). இவர் கந்து வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். குப்புசாமி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெப்படை நோக்கி சென்றபொது, செம்மக்கள் மேடு எனும் இடத்தில் இரண்டு பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பொது மக்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கத்தியால் குத்திக் கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு பகுதியில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை செய்யப்பட்டது. அப்போது திருச்செங்கோடு மலை அடிவராத்தில் சந்தேகப்படும்படி சுற்றிய தனபால் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. கந்து வட்டி செய்யும் தொழிலில் குப்புசாமி மற்றும் தனபால் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்ததுள்ளது. அதன் காரணமாகவே தனது நண்பர் கமல்ராஜ் (39) என்பவருடன் சேர்ந்து குப்புசாமியை கொலை செய்ததாக தனபால் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து கமல்ராஜையும் கைது செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரைப்படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.