குற்றம்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுர ஆசிரியரின் முறைகேடு அம்பலம்... சிபிஐ ஆக்‌ஷன்!

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுர ஆசிரியரின் முறைகேடு அம்பலம்... சிபிஐ ஆக்‌ஷன்!

webteam

ராமநாதபுரத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்,  வருமான வரித்துறை திரும்ப பெற்றுக் கொடுப்பதில் முறைகேடு செய்ததில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக  சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளார்.

மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் 46 பேர் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம்  கடந்த மாதம் 25ந் தேதி வெளியிட்டது.

இதில் தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது பெற்றார்.

இவரது சகோதரர் பஞ்சாட்சரம் Tax  Information Network என்ற நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் Income Tax  E file பண்ணும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதில் 2 கோடியே 84 லட்சம் முறைகேடாக வாடிக்கையாளருக்கு திரும்ப பெற்றுக் கொடுத்து அதில் பல லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளார். இதனை கண்டுபிடித்த  வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ கடந்த 2021ஆம் ஆண்டு பஞ்சாட்சரம் மீது வழக்குப் பதிவு செய்து 2022ஆம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பின்னர் அவர் பிணையில் வந்துள்ளார்.

இந்நிலையில் தேசிய விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் பஞ்சாட்சரம் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் இடையே  வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை நடந்திருப்பதால் வருமான வரித்துறை ஆசிரியர் ராமச்சந்திரனிடம் கணக்கில் வராத 12 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவ்வப்போது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விசாரணைக்கு ஆஜரான ராமச்சந்திரன் அதிகாரிகள் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 12 லட்சத்திற்கு  உரிய ஆவணங்கள் ஒப்படைக்காததால் ராமசந்திரன் மீது வருமான வரித்துறை திரும்ப பெற்றுக் கொடுப்பதில் முறைகேடு செய்ததில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக  120(B) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.