ரஷ்ய அரசு இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 2000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்கும் எனவும் கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபர்களான அருண் ராஜ், மதன் குமார், ரூபா உள்ளிட்ட 9 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அருண் ராஜ், ரஷ்யன் கலாச்சார மையத்தில் பல சந்திப்புகளை நடத்தி அலுவலகம் செயல்படுவது போல இந்த மோசடி வேலையை நடத்தி இருப்பது தெரியவந்தது. மேலும், இதே போல பல தொழில் அதிபர்களிடமிருந்து முதலீடு பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அருண் ராஜிடம் இருந்து 11 விலையுயர்ந்த சொகுசு கார்கள், 476 சவரன் தங்க நகைகள், 400 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் அடிக்கடி ரஷ்யாவிற்கு சென்று வருவதால் ஏதேனும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா, தொழிலதிபர்களிடம் எவ்வளவு மோசடி செய்துள்ளனர் என சந்தேகிக்கப்பட்டது. அதனால் விசாரணை செய்ய மோசடி மன்னன் அருண் ராஜ், அவரது கூட்டாளிகள் மதன்குமார், ரூபா ஆகிய மூன்று பேரை நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, மோசடி மன்னன் அருண் ராஜ்க்கும், கடந்த 2021-ம் ஆண்டு விழிஞ்சம் கடற்கரையில் ஹெராயின், ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டுள்ள ஆதிலிங்கம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் 327 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஆதிலிங்கம் குணசேகரன் உள்ளிட்ட 13 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இந்த ஆதிலிங்கம், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதும், "டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா" என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கடத்தல் பணத்தை நிதி பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சில நாட்கள் பிரபல தமிழ் நடிகை ஒருவரிடம் மேலாளராக இருந்து சினிமா துறையிலும் பைனான்சியராக செயல்பட்டு வந்ததும், விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெற நிதி திரட்டுதல் போன்ற செயலிலும் ஆதிலிங்கம் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் மோசடி மன்னன் அருண் ராஜ் மோசடி செய்த பணத்தின் மூலமாகதான் ஆதிலிங்கம் அரசியல் கட்சியை தொடங்கி அதன் மூலமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அருண் ராஜ் மோசடி செய்யப்பட்ட பணத்தை ஆதிலிங்கம் மூலமாக சினிமா துறையில் ஏதேனும் பைனான்ஸ் செய்துள்ளாரா, விடுதலை புலிகள் அமைப்பை புத்துயிர் பெற எத்தனை கோடி ரூபாய் அருண் ராஜ் வழங்கினார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
அருண் ராஜின் வங்கிக் கணக்குகளை என்.ஐ.ஏ ஆய்வு செய்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளனர். இதனால் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அருண் ராஜை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.