குற்றம்

மனைவிக்கு பரிசு கொடுக்க, பக்கத்து வீட்டுப்பெண்ணை கொன்ற கணவர்!

மனைவிக்கு பரிசு கொடுக்க, பக்கத்து வீட்டுப்பெண்ணை கொன்ற கணவர்!

webteam

சென்னை சூளைமேட்டில் பக்கத்துவீட்டில் இருந்த இளம் பெண்ணை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சூளைமேட்டில் வீடு எடுத்து தங்கி, நர்சிங் வேலை பார்த்து வந்தவர் வேல்விழி. சென்னை விருகம்பாக்கத்தில் பணியாற்றிய இவருடன், மகாலட்சுமி என்ற பெண்ணும் பணியாற்றினார். நர்சிங் ஹோம் நிர்வாகம், ஊழியர்கள் அனைவருக்கும் சூளைமேட்டில், ஒரே இடத்தில் வீடு பார்த்துக்கொடுத்துள்ளது. எனவே இவர்கள் அக்கம்பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர். மகாலட்சுமிக்கு திருமணம் நடந்து, அவரது கணவர் அஜித்குமார் என்பவரும் உடன் வசித்து வந்துள்ளார். ஆனால் வேல்விழி திருமண ஆகாததால், தனியாக வசித்து வந்துள்ளார்.

மகாலட்சுமியின் கணவர் அஜித் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு பிறந்த நாள் வர, தனக்கு பரிசு வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார். பரிசினை வாங்கிக் கொடுக்காவிட்டால் தான் வேலைக்கு போகாத விஷயம் மனைவிக்கு தெரிந்துவிடும் என நினைத்த அஜித், தனது நண்பர்களிடம் கடன் கேட்டுள்ளார். அனைவரும் கைவிரிக்க, இறுதியாக பக்கத்துவீட்டில் வசிக்கும் வேல்விழியிடம் கடன் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். பணமில்லை என்றால் பரவாயில்லை, நகை மற்றும் செல்போனை கடனாக தருமாறு அஜித் வற்புறுத்தியுள்ளார். அதற்கும் மறுப்பு தெரிவித்த வேல்விழி, அஜித்தை திட்டி அனுப்பியுள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த அஜித், வேல்விழியின் துப்பட்டாவை எடுத்து, அப்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சாக்குப்பையில் வேல்விழியின் உடலை கட்டி, ஆட்டோ மூலம் கோயம்பேடு கொன்று சென்றுள்ளார். அங்கிருந்த இரும்பு உருளைக்குள் உடலை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வரும் வழியிலேயே அப்பெண்ணின் நகையை விற்று பணமாக மாற்றியுள்ளார். பணத்தில் மனைவியின் பிறந்த நாளை பரிசுடன், கொண்டாடியுள்ளார். வேல்விழியின் செல்போன் 3 நாட்களாக சுவிட் ஆஃப் நிலையில் இருந்ததால், விருத்தாச்சலத்திலிருந்து போன் செய்த அவரது தந்தை அச்சமடைந்துள்ளார். நேரடியாக சூளைமேட்டிற்கு வந்து தனது மகள் பணிபுரிந்த அலுவலகம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். எங்கும் தகவல் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அனைவரையும் விசாரித்து வரும் போது, அஜித்குமாரின் பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், காவலர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் காவல்துறையினர் சற்று அதிரடியை காட்ட, உண்மையை ஒப்புக்கொண்டார் அஜித். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு கோயம்பேடு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் இருந்த வேல்விழியின் உடலை மீட்டனர். மேலும் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.