உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள கான்ஜிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கான்பன்னா கிராமத்தில் 18 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது 20 வயது காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து தன் வீட்டிற்கு செல்லுமாறு காதலனும், அவரது குடும்பத்தாரும் கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் திரும்பிச்செல்ல மறுக்கவே, பெண்ணின் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கையில் கோடரியுடன், தனது குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு பையனின் வீட்டிற்குச் சென்றுள்ளார் பெண்ணின் தந்தை. தன்னுடன் வீட்டிற்கு வருமாறு மகளை கேட்டிருக்கிறார் தந்தை. ஊரார் அனைவரும் அங்கு கூடிவிட்ட நிலையில், தனது மகள் தொடர்ந்து வரமறுக்கவே, ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சரமாரியாக கோடரியால் அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளார். அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரைத் தடுக்கச் சென்ற காதலனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், அங்கு சென்ற போலீஸார் கோடரியுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் தந்தையை கைது செய்தனர். நேரில் பார்த்தவர்கள் கொடுத்த சாட்சிப்படி, கௌரவக்கொலையாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததாக போலீசார் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.