குற்றம்

ரூ. 6 லட்சம் கடனுக்காக சொத்தையே எழுதி கேட்பதா? மதுரையை மிரட்டும் கந்துவட்டி கொடுமை!

ரூ. 6 லட்சம் கடனுக்காக சொத்தையே எழுதி கேட்பதா? மதுரையை மிரட்டும் கந்துவட்டி கொடுமை!

webteam

மதுரையில் ஆறு லட்ச ரூபாய் கடனுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை எழுதிக் கொடுக்கச் சொல்லி மிரட்டல் விடுத்ததால்  பிரபல ஹோட்டல் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் புதூர் பகுதியில் உணவகமொன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது தொழில் மேம்பாட்டுக்காக ஜெயக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளார் அழகுராஜா. அதற்கு உரிய வட்டியும் செலுத்தி வந்துள்ளார். அசல் தொகையை விட கூடுதலாக வட்டியை அழகுராஜா செலுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜெயக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இன்னும் கூடுதலாக வட்டி கேட்டும், அசல் தொகை செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர். 

மேலும் பணத்தை உடனே செலுத்துமாறும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொடுக்காதபட்சத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய அழகுராஜாவின் உணவகத்தை எழுதிக் கொடுக்கும்படியும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அழகுராஜா, போலீசில் புகார் செய்திருக்கிறார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீண்டும் பணம் கேட்டு அழகுராஜாவையும் அவரது மனைவியையும் அவர்களின் வீட்டிற்கு சென்று அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான அழகுராஜா, அக்காரணத்தினால் விஷ மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் அவர்களை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “மேற்கண்ட நபர்கள் மீது கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரத்துடன் நேரில் புகார் அளித்தால் நிச்சயம் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். மேலும் கந்துவட்டி தொடர்பான விழிப்புணர்வை தொடர்ச்சியாக மதுரையில் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.