பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கிணற்றுக்குள் கிடந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பெண் சிசு பிரேதப் பரிசோதனையில் பெண் சிசு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நேற்று நள்ளிரவில் கிணற்றின் அருகே உள்ள வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் கிணற்றின் அருகே உள்ள வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்திய போது அந்தக் குழந்தை அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (47) என்பருடைய மகள் வித்யா கெளரிக்கு பிறந்த பெண் குழந்தை என தெரியவந்தது.
மேலும் வித்யாகெளரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். பின்னர் மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான ரமேஷ் என்பவருடன் ஏற்பட்ட திருமணம் மீறிய உறவால் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது ஆண் நண்பர் ரமேஷிடம் வித்யாகெளரி கூறியுள்ளார். அதற்கு ரமேஷ் "உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் குழந்தையை அழித்துவிட்டு வா" எனக் கூறியுள்ளார். ஆனால் வித்யாகெளரி ஏற்கனவே திருமணம் செய்து வாழ்க்கை சரியாக அமையவில்லை என நினைத்து குழந்தையை அழிக்காமல் வயிற்றில் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வித்யாகெளரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு தனது சகோதரியான பூபதிக்குத் தகவல் கொடுத்து பிரசவம் பார்த்துள்ளார். திருமணம் மீறிய உறவால் பிறந்த குழந்தை என்பதால் வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்து குழந்தையின் கழுத்தைத் துணியால் இறுக்கி கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் புவனேஸ்வரி,பூபதி,வித்யாகெளரி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு கைது செய்துள்ளனர்.