குற்றம்

``ஸ்கூலுக்கு சீல் வைங்க போலீஸ்... ப்ளீஸ்”- வீடியோ பதிவிட்டபடி 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

``ஸ்கூலுக்கு சீல் வைங்க போலீஸ்... ப்ளீஸ்”- வீடியோ பதிவிட்டபடி 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

நிவேதா ஜெகராஜா

`எனது தற்கொலைக்கு ஆசிரியர்கள்தான் காரணம். என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்கிறேன்’ எனக்கூறி அம்பத்தூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார்.

அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இளைய மகனும் உள்ளனர். இளைய மகன் பெயர், பாரதி செல்வா (14). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மகன்கள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு கடந்த திங்கட்கிழமை காலை பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றிருக்கின்றனர். பெற்றோர் சென்ற பிறகு மகன்கள் இருவரும் பள்ளி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை கல்லூரி படிப்பு முடித்து மூத்த மகன் வீட்டிற்கு சென்றபோது, அங்கு தம்பி தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்து அவர் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் கூடி, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தற்கொலைக்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொண்டபோது, மாணவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. அதில் அவர், “நான் சாகப்போறேன். தற்கொலைக்கு என் குடும்பத்தினர் காரணம் இல்லை. என்னை தினமும் ஸ்கூல்ல டீச்சர்ஸ் அடிச்சு கொடுமை படுத்துறாங்க. அதானல் மன உளைச்சலில் இருக்கிறேன். இந்த உலகத்தையே பிடிக்கவில்லை. ஸ்கூல்மேல போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கணும். ப்ளீஸ் போலீஸ். அந்த ஸ்கூலில், அராஜகம் செய்றாங்க. ஸ்கூலுக்கு சீல் வைக்கணும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும், எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பது வரை பல விஷயங்களை அவர் வீடியோவில் பேசியுள்ளார். இதேமாணவர், தந்தை கண்டித்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக ஒரு புகாரும் காவல் நிலையத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் உயிரிழந்தும் விட்டார். இச்சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.