குற்றம்

பொறாமையால் போட்டுக்கொடுத்த டிரைவர்: சிக்கியது 75 மூட்டைகள் குட்கா!

பொறாமையால் போட்டுக்கொடுத்த டிரைவர்: சிக்கியது 75 மூட்டைகள் குட்கா!

webteam

பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சேலம் அருகே கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சுங்கசாவடியில், இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை சோதனை செய்ததில், லாரியின் பின்பகுதியில் தக்காளி கூடைகளை மேல்புறம் வைத்து, உள்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

சோதனை முடிவில் 75 மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட, ரூ.25 லட்சம் மதிப்பு கொண்ட குட்கா பொருட்களை லாரியுடன் போலீஸார்
பறிமுதல் செய்தனர். அத்துடன் லாரியின் ஓட்டுனர் ராஜேந்திரன் மற்றும் லாரி உரிமையாளர் மாதேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விநியோகிப்பதற்காக
குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் கடத்தல் லாரியை ஓட்டுவதாக இருந்த டிரைவர், ஏதோ காரணத்தால் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அந்த டிரைவர் அளித்த புகாரின் பேரிலே இந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

(தகவல்கள்: மோகன்ராஜ், புதிய தலைமுறை செய்தியாளர், சேலம்)