பொள்ளாச்சி ஜோதி நகரில் வசிக்கும் மர வியாபாரி தங்கவேல் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை மற்றும் ரூ 40,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கைவரிசை காட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி ஜோதி நகர் D காலனியில் வசித்து வருபவர் மர வியாபாரி தங்கவேல். இவரது மனைவி பிரேமலதா. இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தங்கவேலின் உறவினர் ஒருவர் அவ்வழியாக சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு சந்தேகமடைந்து, கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் வீட்டை சோதனையிட்டபோது முன்பக்க கதவுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் கொடுத்தனர். இன்று அதிகாலை குருவாயூரிலிருந்து வந்த தங்கவேல் சோதனையிட்டபோது பீரோவில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை ஆய்வுசெய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.