விழுப்புரம் நீதிமன்றம்  file image
குற்றம்

'பெண்ணை தாக்கி நகை பறித்த பா.ஜ.க பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை' நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விழுப்புரத்தில் பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற பாஜக பிரமுகருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

PT WEB

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருடைய மனைவி கலையரசி (35). இவர் கடந்த 8.4.2021 அன்று செஞ்சியில் உள்ள தன் தாய் வீட்டுக்குக் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.

Crime

அப்போது வழியில் கலையரசி தன் குழந்தையின் மருந்து சீட்டை மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதை எடுப்பதற்காக மரகதபுரத்தில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் வழியில் கண்டியமடை என்ற இடத்தில் முத்துக்குமரன், தனது மனைவி கலையரசி மற்றும் குழந்தையையும் கீழே இறக்கிவிட்டுவிட்டு தான் மட்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கலையரசியை இரும்புக்கம்பியால் தாக்கி விட்டு “உன்னையும், குழந்தையையும் கொன்றுவிடுவேன்” என மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் முனிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்போதைய பா.ஜ.க. நகரச் செயலாளர் அறிவழகன் (41) என்பவரைக் கைது செய்தனர்.

பாஜக

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றம் எண் 1-ல் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்புக் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறினார்.

இதையடுத்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அறிவழகன், கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.