குற்றம்

மைசூர் டூ ஈரோடு: சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 1.5 டன் குட்கா பறிமுதல் - 7 பேர் கைது

மைசூர் டூ ஈரோடு: சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 1.5 டன் குட்கா பறிமுதல் - 7 பேர் கைது

webteam

அந்தியூர் அருகே தடைசெய்யப்பட்ட 1.5 டன் குட்கா, 50 ஆயிரம் பணம், கார் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் 55 மூட்டைகளில் 1.5 டன் எடையுள்ள 13 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) என்பவரை கைது செய்தனர். அதேபோல் சரக்கு வாகனத்தின் பின்னால் வந்த காரில் குட்கா பொருட்களின் உரிமையாளரான பவானி அருண் (35) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருள்களை கடைகளில் விற்பனை செய்யும் மையிலம்பாடி, கிருஷ்ணாபுரம் ஜெகநாதன் (38), ஈரோடு கருங்கல்பாளையம் திருப்பதி (32), கடத்தூர், இந்திரா நகர் அசோக்குமார் (35), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் ரஞ்சித் (31) மற்றும் பவானி திருவள்ளுவர் நகர் வஞ்சரவேல் (53) ஆகியோரையும் அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.