குற்றம்

ஏபிவிபி தலைவர் தனது வீட்டு வாசலில் அசிங்கம் செய்ததாக 62 வயது பெண் போலீசில் புகார்

ஏபிவிபி தலைவர் தனது வீட்டு வாசலில் அசிங்கம் செய்ததாக 62 வயது பெண் போலீசில் புகார்

EllusamyKarthik

சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பின் தேசியத் தலைவரும், மருத்துவருமான சுப்பையா ஷண்முகம். 

அவர் வசிக்கின்ற அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு பிளாட்டில் தனியாக வசித்து வருகிறார் 62 வயதான கணவரை இழந்த பெண் ஒருவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காரை நிறுத்துவதில் மருத்துவர் சுப்பையாவுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அந்த பெண் வசிக்கும் பிளாட்டின் வாசல் கதவிற்கு அருகில் தினமும் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டுள்ளன. குப்பை, பயன்படுத்தப்பட்ட மாஸ்க் என ஒவ்வொரு நாளும் அது தொடர்ந்துள்ளது. அதனால் அந்த பெண் சங்கடங்களுக்கு ஆளாகியுள்ளார். 

 ‘இதனை செய்வது மருத்துவர் சுப்பையா தானோ?’ என்ற சந்தேகம் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு எழுந்துள்ளது. 

இருந்தாலும் அந்த விஷமத்தனத்தை செய்பவரை கையும் களவுமாக பிடிப்பதற்காக அண்மையில் சிசிடிவி கேமிராவை வாசலில் பொறுத்தியுள்ளனர் அந்த பெண்ணின் குடும்பத்தினர்.

இந்நிலையில் நீல நிற டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் அந்த பெண் குடியிருக்கும் பிளாட்டின் கதவு அருகே சிறுநீர் கழித்து விட்டு சென்றுள்ளார். அந்த காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளன. அதனை ஆவணமாக வைத்துக் கொண்டு இதை செய்தது மருத்துவர் சுப்பையா தான் என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சுமார் ஒரு வார கால அலைக்கழிப்பிற்கு பிறகே ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் இதுவரை அது குறித்த எப்.ஐ.ஆர் பதிவு செயயப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

"அவரது அரசியல் பின்புலத்தினால் காவல்துறையினர் இந்த வழக்கை அடுத்தக்கட்ட விசாரணைக்கு கொண்டு செல்லாமல் உள்ளனர் என எண்ணுகிறேன். புகார் கொடுத்த நாளிலிருந்து நான் பல முறை காவல் நிலையத்திற்குச் சென்று வந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருமகனான பாலாஜி.தன் மீதான குற்றச்சாட்டை மருத்துவர் சுப்பையா மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எங்கள் தலைவரின் பெயரை குறைப்பதற்காக இது மாதிரியான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.