இளைஞரை கடத்திய காவலர்கள் pt desk
குற்றம்

திருப்பூர்: இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி - 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது

திருப்பூரில் இளைஞரை கடத்தி ரூ.2 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 காவலர்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாநகர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த போது வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை மிரட்டி தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அதில் சிலர் காவலர் சீருடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த இளைஞர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த இளைஞரின் மனைவி நேற்று முன்தினம் நல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நல்லூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.

Accused

இதற்கிடையே, அந்த இளைஞர் நேற்று முன்தினம் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தன்னை சிலர் கடத்தி பெருமாநல்லூர் அருகே ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும், ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதையறிந்த நல்லூர் போலீஸார், சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து பெருமாநல்லூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞரை போலீஸார் நேற்று மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவரை கடத்திச் சென்றவர்கள் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33) மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர் லட்சுமணன் (32) மற்றும் இவர்களின் நண்பர்களான ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 காவலர்கள் உட்பட 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.