ராணிப்பேட்டையில் திருட்டு நகைகளை பிரிப்பதில் கூட்டாளியை கொலை செய்த 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் சரணாலயா நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கடந்த மாதம் 18ஆம் தேதி அழுகிய நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை யாரோ வெட்டி கொலை செய்து மூட்டை கட்டி கிணற்றில் விசியது தெரியவந்தது. இந்த வழக்கில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரனை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரின் மகன் தீனா என்பது அறியப்பட்டது. அவர் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது வெளிவந்தது.
கொலை செய்யப்பட்ட தீனாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் திருட்டு நகைகளை பங்கு பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் போன்ற காரணங்களால் தீனாவை அவரது நண்பர்கள் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தீனாவின் கூட்டாளிகள் லோகேஷ் (21), சதாம் பிரபாகரன் (27), கூடலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நவீன் (19), அம்மனூரை சேர்ந்த கோகுல கண்ணன் (23), பருத்திபுத்தூரை சேர்ந்த அஜீத்குமார் (19) சச்சின் (18) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் பரிந்துரையின் பேரில் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.