குற்றம்

யானை மீது தீ வைத்து கொடூரக் கொலை செய்த விவகாரம்: மசினகுடியில் 55 விடுதிகள் மூடல்

யானை மீது தீ வைத்து கொடூரக் கொலை செய்த விவகாரம்: மசினகுடியில் 55 விடுதிகள் மூடல்

Sinekadhara

மசினகுடியில் காட்டு யானை மீது எரியும் டயரை வீசிக் கொன்ற விவகாரத்தில் அந்தப் பகுதியில் உள்ள விடுதிகள் காலவரம்பின்றி மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 4 ஆம் தேதி இரவு உணவு தேடி வந்த காட்டு யானை மீது சிலர் டயரைக் கொளுத்தி வீசினர். உடலில் பற்றிய தீயுடன் பிளிறியபடி காட்டுக்குள் ஓடிய யானைக்கு காது உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு, புண் சீழ்பிடித்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

காதின் ஒருபகுதி அறுந்து விழுந்த நிலையில், யானைக்கு சிகிச்சை தர வனத்துறை லாரியில் அழைத்துச் சென்றபோது கடந்த 19 ஆம் தேதி யானை உயிரிழந்தது. யானைக்கு தீ வைத்த இரக்கமற்ற கொடூர சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மசினகுடியில் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த 55 விடுதிகள் காலவரம்பின்றி மூடப்பட்டன.

அதே நேரத்தில் சிலர் செய்யும் தவறுகளால் முறையாக அனுமதி பெற்றவர்களும் பாதிக்கப்படுவதாக ரிசார்ட் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யானையை தீவைத்து கொன்ற சம்பவத்தில் சட்டவிரோதமாக ரிசார்ட் நடத்தி வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வரும் நிலையில் சட்டவிரோத விடுதிகளை களையடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.