Madurai robbery  Ramesh
குற்றம்

"ஆவணத்தை காட்டிட்டு வாங்கிட்டு போங்க”-காவலர்கள் போல நடித்து காரில் சென்றவர்களிடம் 50 லட்சம் வழிப்பறி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரில் கொண்டு சென்ற 50 லட்சம் பணத்தை காவலர்கள் போல நடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Snehatara

மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத் (55). இவர் டெக்ஸ்டைல் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர் காரில் தனது மனைவி யூசுப் சுலைகா மற்றும் ஓட்டுநர் சித்திக்குடன் நள்ளிரவு மதுரையில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு சென்றனர். சேக் தாவூத், அவரது கையில் 50 லட்சம் பணத்துடன் காரில் திருச்சுனை நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காவலர்கள் போல நின்றிருந்த இருவர் வண்டியை ஓரம் கட்டுமாறு கூறியுள்ளனர்.

காவலர்கள் தானே என நினைத்து வண்டியை சாலையோரம் நிறுத்திய போது வாகனத்தை சோதனை செய்த அந்த மர்ம நபர்கள் அவரது மனைவி கைப்பையில் வைத்திருந்த 50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, இதற்கான ஆவணத்தை காண்பித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

Madurai robbery

பின்தொடர்ந்து காவல் நிலையத்தில் சென்றபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் பறிபோன 50 லட்சம் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்கள் போல நடித்து 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.