Accused pt desk
குற்றம்

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி: வேலூர் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை - 50 பேர் கைது

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டம் முழுவதும் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி-க்கள், அனைத்து மதுவிலக்கு மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

Accused

ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட கள்ளச்சாராய வேட்டையில் விற்பனை செய்ததாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதிரடியாக மாவட்ட முழுவதும் 50 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்று தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் “சட்ட விரோத கள்ளச்சாராய விற்பனை மற்றும் மது விற்பனை குறித்து 6379958321 என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணிற்கும், 8838608868 என்ற வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எண்ணிற்கும், 9087756223 என்ற குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எண்ணிற்கும் தகவல் கொடுக்கலாம். இது ரகசியம் காக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Arrested

“வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,82,475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 64,482 லிட்டர் கள்ளச்சாராயம், 43,164 மது பாட்டில்கள் ஆகியவை அழிக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய எதிரிகள் மீது 5,656 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.