செய்தியாளர்: கோகுல்
திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு தனது நண்பரான மாதரிஸ் என்பவரை, கோயம்பேட்டிற்கு செல்ல ஒரகடத்தில் பஸ் ஏற்றிவிட்டு தெரேசாபுரம் திரும்பியுள்ளார்.
அப்போது, போந்தூர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே அவரது கார் சென்றபோது ஹீண்டாய் ஐ20 காரில் வந்த 5 பேர், அவரை மடக்கி, காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து மொபைல் போனை பறித்துள்ளனர். பின்னர், அவரின் இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.1.90 லட்சம் பணத்தை ‛ஜி-பே’ மூலம் அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அதேபோல், வல்லம் பகுதியில் வந்த ஒருவரை மடக்கி, 2 தங்க மோதிரம், மற்றும் மொபைல் போன், மற்றொருவரிம் மொபைல் போன் மற்றும் ‛ஜி-பே’ வாயிலாக 10 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து புகார்களின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து, தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் பூந்தமல்லி காட்டுபாக்கத்தை சேர்ந்த மனோஜ் (20), மகேஷ் (19), பாலாஜி (20), மாங்காட்டை சேர்ந்த அஜய் 18, திருவேர்காட்டை சேர்ந்த தேஜேஷ்வ் (22) ஆகிய ஜந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில், இவர்கள் அனைவரும் வாடகைக்கு கார் எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.