திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூரில் நள்ளிரவில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வீரவநல்லூர் புதுமனைத் தெருவைச் சேர்ந்த அசனார் என்பவரது மகன் மைதீன்பிச்சை (வயது 55). இவர் வீரவநல்லூர் மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, நகைப் பையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகேயுள்ள தெருவில் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமார் 5 கிலோ நகையை பறித்துச் சென்றது தெரியவந்தைள்ளது. நகைகளை பறித்துச் சென்றவர்களை அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சரவணன், சேரன்மாதேவி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் `புதிய தலைமுறை’ தரப்பில் விசாரித்தபோது, “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலமும் தேடி வருகிறோம். மேலும் இதற்காக ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: “மீண்டும் அதிமுக ஆட்சியமைத்து தமிழக மக்களை காப்பேன்”- சேலம் எடப்பாடியில் சசிகலா சூளுரை