செய்தியாளர் : காமராஜ்
திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் சோதனை செய்தனர்.
அப்போது ஒட்டன்சத்திரத்தை சார்ந்த ஈஸ்வரி, கருப்பசாமி, முகமது ஜியாதீன், ஜஸ்டின், கார்த்திகேயன் ஆகியோர் விற்பனைக்காக யானைத் தந்தத்தால் ஆன பொம்மைகளை கொண்டு வந்தது தெரியவந்தது. மொத்தம் ஆறரை கிலோ எடை யானை தந்தத்தினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகளை பாலமுருகன், பிரபாகரன், சுப்பிரமணி, பைசர், பார்த்தசாரதி, ராஜா, ராஜகுமார் ஆகியோர் வாங்க வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து யானை தந்தத்தால் ஆன பொம்மைகளை விற்பனை செய்ய வந்தவர்கள், வாங்க வந்தவர்கள் என 12 பேரையும் வனத்துறை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் ஆறரை கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை பறிமுதல் செய்தனர். இன்னும் கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என வனத்துறை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.