5 பேர் கைது pt desk
குற்றம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: இரு குழுவினர் இடையே மோதல் - வீடியோ வைரலான நிலையில் 5 பேர் கைது

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்தன்று கடற்கரை பகுதியில் இரு தரப்பினர்கள் கம்புகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்த கொண்டாட்டமாகும். இதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது.

இந்த தசரா திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபாடுவார்கள். இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 12 ஆம் தேதி நள்ளிரவு கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது.

இரு குழுவினர் இடையே மோதல்

இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி கொடியேற்ற தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்படி குவிந்தவர்களில் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மாலை அணிந்த பக்தர்களும் தனித்தனியாக குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு குழுவினர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், இரு குழுவினர்களும் கையில் கிடைத்த கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் ஒரு இளைஞரை 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கம்புகளால் தாக்கியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து இரு குழுவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்த மகேஷ் (23), சூர்யா (19), சுடலை (21) மேலப்பாட்டத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (21), ஆறுமுகக்கனி (27) ஆகிய 5 பேரை கைது செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.