குற்றம்

சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்; கொலையாளித் தேடும் தனிப்படை! #திருப்பூர்

சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்; கொலையாளித் தேடும் தனிப்படை! #திருப்பூர்

நிவேதா ஜெகராஜா

திருப்பூரில் இன்று காலை கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் அடைத்துவைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்த பெண் யார், கொலை செய்தது யார், எப்படி சூட்கேஸை சம்பவ இடத்துக்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பன போன்ற விசாரனையை நல்லூர் காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தனிப்படை போலீசார் விசாரணை தீவிரம்

திருப்பூர் தாராபுரம் சாலை புதுநகர் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 30-35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது. இதனிடையே உடலை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

மெட்டி - திருமணமான பெண்

இந்நிலையில், இவ்வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர். சூட்கேஸில் இருந்த பெண் யார் என கண்டறிவது மிகப்பெரிய சிக்கலாக எழுந்துள்ளது. காலில் மெட்டியுடன் இருப்பதால் கல்யாணம் ஆன பெண் என கூறுகின்றனர் காவல்துறையினர். உடலில் பாலியல் வன்முறைக்கான அறிகுறிகள் இல்லை என்றும், அப்பெண்ணை கழுத்திலோ அல்லது தலையிலோ நசுக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், நசுக்கி அழுத்தியற்கான தடையங்கள் உள்ளது என்றும் கூறியுள்ளனர் காவல்துறையினர்.

தமிழ்நாட்டு பெண் தானா?

அப்பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தானா என்பதையுமே உறுதிபடுத்த முடியவில்லை என கூறும் காவல்துறையினர், உடலை அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் ரத்த உறவினர்கள் கோரும் வரை உடற்கூராய்வு நடத்த முடியாது என்பதால் பெண்ணின் தகவல்கள் எதும் கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

கொலையாளி யார்?

அதே நேரத்தில் சூட்கேஸ் இருந்த சுற்றுவட்டார பகுதியில் அப்பெண்ணை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் வேறு பகுதியில் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளார்கள் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி களையும் 4 தனிப்படைகள் அமைத்து சோதனை செய்து வரும் நிலையில், எத்தனை மணிக்கு சூட்கேஸ் கொண்டுவரப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது, யார் யார் ஈடுபட்டார்கள் என்ற விசாரனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.