மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது pt desk
குற்றம்

நாமக்கல்: ஆழ்துளை கிணறு வாகன உதிரி பாகங்களை திருடி ரூ.4 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பயன்படும் வாகனத்தின் உதிரி பாகங்களை திருடி சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

webteam

செய்தியாளர்: துரைசாமி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியை சேர்ந்தவர் தனேஷ்குமார் (45). இவர், திருச்செங்கோட்டில் வைஷ்யா லெட்சுமி டிரிலிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரீக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார்.

Arrested

இந்த நிறுவனத்தில் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் சூரபள்ளியை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) என்பவர் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் மேனேஜராக பணியாற்றி உள்ளார். அப்போது கொஞ்சம், கொஞ்சமாக லாரி உதிரி பாகங்களை திருடி விற்பனை செய்துவந்த ரஞ்சித், அதன்மூலம் கிடைத்த பணத்தை தன் தாய் லதா, தந்தை சரவணன், சகோதரர் தினேஷ்குமார் ஆகியோரின் வங்கி கணக்குகளில் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை மொத்தமாக 3.95 கோடி ரூபாய் இருப்பு வைத்துள்ளார்.

இதற்கிடையே ரஞ்சித் மீது சந்தேகமடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனேஷ்குமார், பணம் குறித்து ரஞ்சித் குமாரிடம் விசாரித்துள்ளார். அப்போது ரஞ்சித் முன்னுக்கு பின் தகவல் தெரிவித்துள்ளார். அதனால் இதுகுறித்து நிறுவன உரிமையாளர் புகார் அளிக்கவே, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது ரஞ்சித்குமார் உதிரி பாகங்களை குறைந்த விலைக்கு பில் போடாமல், வெளிசந்தையில் விற்பனை செய்து, கிடைக்கும் கூடுதல் பணத்தை தனது வங்கி கணக்கு மற்றும் தன் சகோதரர் தினேஷ்குமார், தாய் லதா, தந்தை சரவணன் ஆகியோரது வங்கி கணிக்குகளில் இருப்பு வைத்தததை கண்டறிந்தனர். இதனையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.