துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக துரைப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், தலைமை காவலர் சுபாஷ் சந்திர போஸ், சுதாகர், முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்வோரை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் தனிப்படை போலீசார் துரைப்பாக்கம், இளங்கோ நகர் கெனால் அருகே கண்காணித்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் பைகளில் கஞ்சாவை மறைத்து வைத்து கல்லூரி மாணவர்கள் போல் வலம்வந்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் வைத்திருந்த நான்கு பைகளில் வைத்திருந்த 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர்கள் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் ரஞ்சித்(20), விக்னேஷ்(23), ஐடி ஊழியர் பரத்(22), கண்ணகி நகரைச் சேர்ந்த சூர்யா(எ) மண்டை(23) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மொத்தமாக சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதில் சூர்யா மீது போக்சோ, அடிதடி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.