செய்தியாளர்: சுரேஷ்குமார்
சிலர் தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் தெற்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்குபையுடன் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குபையை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சுஜித்குமார் (26), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்பாண்டி (22), கிஷோர்நாத் (27), மற்றும் எழுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திரமாநிலம் சிலுக்குவார்பேட்டை சுபானி என்பவரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்தததாகவும், அதன் பின்னர் 4 பேரும் சேர்ந்து கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுபானி என்பவரை பிடிக்க போலீசார் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.