Accused pt desk
குற்றம்

திருவண்ணாமலை: நகைக்கடை அதிபரின் மகன்கள் கடத்தல் - பணம் கேட்டு மிரட்டியதாக 4 பேர் கைது

திருவண்ணாமலையில் பிரபல நகை வியாபாரியின் 2 மகன்களை கடத்தி, ரூ.70 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் கேட்டு மிரட்டல். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

webteam

செய்தியாளர்: முகேஷ்

திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் நரேந்திர குமார் என்பவரின் மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த். இவர்கள் இருவருக்கும் அய்யங்குளம் தெருவை சேர்ந்த அடகு தொழில் செய்து வரும் ஹன்ஸ்ராஜ் என்பவருக்கம் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

Arrested

இந்நிலையில், ஜித்தேஷ் மற்றும் ஹரிஹந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களை தாக்கி காரில் கடத்திச் சென்றனர். இதையடுத்து அந்த மர்ம கும்பல் ஜித்தேஷ் மற்றும் ஹரிஹந்த் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் பணம் மற்றும் நகைகள் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மர்ம கும்பலை பிடிக்க காத்திருந்தனர். காவல்துறையினரை கண்ட கடத்தல் கும்பல் கடத்தப்பட்ட இருவரையும் விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார், செங்கம் அருகே கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து மூவரையும் மேல் சங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், “திருவண்ணாமலையைச் சேர்ந்த அடகு கடை வியாபாரி ஹன்ஸ்ராஜ் கொடுத்த தகவலின் பெயரில் நகைக்கடை அதிபரின் மகன்களை கடத்தினோம்” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹன்ஸ்ராஜ், பெங்களூரை சேர்ந்த விக்ரம், மனோ என்கிற கபாலி மற்றும் வாசிம் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் தனிப்படை போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.