ஈரோட்டில் மருத்துவரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சகோதரர்கள் உள்பட நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் தங்கவேல் டாக்டர் வீதியில் வசித்துவரும் மருத்துவர் விஷ்ணு தீபக் தனது குடும்பத்தினருடன் கடந்த 22ஆம் தேதி திட்டக்குடி சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கர் திறக்கப்பட்டு தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் மருத்துவரின் கிளீனிக்கில் உதவியாளராக வேலை செய்துவந்த வசந்த்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மருத்துவரின் வீட்டில் கடந்த 24ஆம் தேதி தனது சகோதரர் அருண்குமார் மற்றும் நண்பர்கள் பிரவீன்குமார், பிரித்விராஜ் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், மோப்பநாய் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கேட்ரிங் படித்த வசந்தகுமார் வீட்டில் மிளகாய் பொடியை தூவியது தெரியவந்தது. கொள்ளையடித்து விட்டு கோவை சென்ற நால்வரும் பணம் மற்றும் நகையை பங்கு போட்டுக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நால்வரையும் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 67 பவுன் தங்க நகை, 3 லட்சம் ரொக்கம் மற்றும் 250 கிராம் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.