Accused pt desk
குற்றம்

ஈரோடு: ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் திருட்டு – 4 பேர் கைது

ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய வழக்கில் நால்வரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 700 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் வெட்டுக்காட்டுவேல்சு பகுதியைச் சேர்ந்த கவின்பிரசாத் என்பவர் ராயர்பாளையத்தில் வயர் மற்றும் காப்பர் விற்பனை செய்யும் கம்பெனியை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கம்பெனியில் இருந்து காப்பர் கம்பிகள் குறைந்து வருவது குறித்து சந்தேகமடைந்த அவர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதி வழியாக கம்பெனியின் உள்ளே வரும் அடையாளம் தெரியாத சில நபர்கள் காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Copper seized

இப்படி கடந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1400 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவினாசியில் உள்ள பழைய இரும்புக் கடையில் அந்த காப்பர் கம்பிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வெற்றிவேல் (எ) வெற்றி, தருமபுரியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பழனிவேல் ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 700 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.