திரிபுராவில் இருந்து விலையுயர்ந்த சடிவா கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் வாட்ஸ் அப் மூலமாக விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள பிவி செரியன் லேனில் இருசக்கர வாகனத்தில் நீண்ட நேரமாக சந்தேகப்படும்படியாக அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற எழும்பூர் போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த நபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் பொட்டலங்களாக சுமார் 2160 கிராம் விலையுயர்ந்த கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து எழும்பூர் காவல் ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமீஸ்கான் என்பதும், இவர் திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்துவருவதும் தெரியவந்தது.
மேலும், சூளைமேட்டை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் கஞ்சா வாங்கி, சென்னையில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அளித்த தகவலின் பேரில் அரவிந்தை கைதுசெய்து அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 2100 பாக்கெட்டுகள் கஞ்சா மற்றும் 2 சிறிய எடை இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரபீக் இஸ்லாம், ஜேசிம் உத்தின் ஆகியோரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளாக செய்து விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அரவிந்தை வைத்து கஞ்சா கேட்பது போல் நடிக்கச் சொல்லி எழும்பூர் வேனல்ஸ் சாலை வடக்கு ரயில் நிலையத்தின் அருகே வரவழைத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திரிபுரா பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சடிவா எனும் விலையுயர்ந்த கஞ்சாவை ரயில் மூலமாக கடத்தி சென்னைக்கு கொண்டுவருவதும், இங்கு வாட்ஸ்ஆப் மூலமாக கேட்கும் நபர்களுக்கு 10 கிராம் 500 ரூபாய் விலையில் நேரடியாக சென்று விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவர்களிடம் சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தமாக 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைதுசெய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.