குற்றம்

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கொலை செய்ய முயற்சி - கணவன் மனைவி உட்பட 4 பேர் கைது

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கொலை செய்ய முயற்சி - கணவன் மனைவி உட்பட 4 பேர் கைது

webteam

கோவையில் காரில் அமர்ந்திருந்த நபரை கத்தியால் சரமாரியாக குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கணவன், மனைவி திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கோவை டாடாபாத் 9-வது வீதியை சேர்ந்தவர் ஜோய். இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வரும் இவர், கடந்த 14 ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில், மதன்பிரபு என்பவரிடம் 2 லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார். பணத்தை வாங்கி விட்டு காரில் அமர்ந்தபடி மதன் பிரபுவிடமும், அவரது மனைவி கவிதாவிடமும் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஜோயை கடுமையாக தாக்கினார். இதில் நிலை குலைந்த ஜோய், காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார். அப்போதும் விடாமல் வந்த அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தினார்.

தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் கத்தியால் குத்திய நபர் தப்பி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கத்தியால் குத்துப்பட்ட ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ஜோயிடம் பணம் வாங்க வந்த, மதன்பிரபு-கவிதா தம்பதி கூலிப்படை மூலம் இந்த சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது. ரூ.26 லட்சம் ஜோயிடம் கவிதா பெற்ற நிலையில், ஜோயிக்கும், மதன்பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கொடுத்த பணத்தை ஜோய் கேட்டதை அடுத்து, ரூ.2 லட்சம் முதலில் கொடுப்பதாக கூறி வரவழைத்து, ஜோயை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, தனது நண்பர்களான பிரதீப் ராஜா மூலம் ஜோயை கொலை செய்ய முடிவு செய்தனர். ஆனால், 20 முறைக்கு மேல் குத்துப்பட்டும் ஜோய் உயிர்பிழைத்தார். இதையடுத்து, மதன்பிரபு, கவிதா, கத்தியால் குத்திய சூர்யா, பிரதீப் ராஜா ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.